×

கற்போம் எழுதுவோம் புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, நவ.4: கற்போம் எழுதுவோம் என்ற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்திற்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டத்தை மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் முதன்மைக் கல்வி அலுவலரால் செயல்படுத்தப்படவுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் ஆண்கள் 1,987, பெண்கள் 5,962 என மொத்தம் 7,949 பேருக்கு கல்வி பயிற்றுவிக்க 4 மாதங்களுக்கு 1 கட்டம் என 3 கட்டங்களாக பிரித்து இவ்வாண்டில் தன்னார்வல ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. தன்னார்வலர்களின் குறைந்த பட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும்.

மேலும் வயது வந்தோர் கல்வித் திட்டங்களில் ஏற்கனவே பணிபுரிந்தோர், பெண்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்டம், சாரண, சாரணியர் மற்றும் தேசிய மாணவர்படை மாணவர்கள் இதற்கு தகுதியானவர்கள். தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கிட இத்திட்ட விதிகளில் வழிவகை ஏதும் செய்யப்படவில்லை. இருப்பினும் பயிற்சிகாலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் குறைந்தபட்சம் 20க்கும் மேற்பட்ட கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கி தேர்ச்சி பெறவைக்கும் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரால் பாராட்டுச் சான்று மற்றும் விருதுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் 11.11.2020-க்குள் அந்தந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடம் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) விருப்ப கடிதத்தை ஒப்படைக்க வேண்டும்.

Tags :
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்